Monday 11 January 2016

தெய்வத்தைத் தேடு


      
தெய்வத்தைத் தேடியும் காணவில்லை - யெந்தத்
திக்கிலும் நல்லருள் தோன்றவில்லை
உய்வதற் கோர்வழி எங்குமில்லை - யெந்த 
ஊரினில் தேடியும் பாசமில்லை
செய்வினை சாபங்கள் கேடு தொல்லை - யிவை  
சேர்ந்து இடர் தரும் பார நிலை
மெய்வருத்தம் சாவு மேலும் வதை - யிவை
மீளப் பிடித்தெம்மை ஆட்டும்நிலை

கையைப் பிடித்தனல் கொண்ட உலை - தன்னில்’
காயம் எரிந்திடத் தள்ளும் நிலை
நெய்யை மொண்டு ஊற்றிமேலும் தீயை - ஊதி
நீள வளர்த்திடு தீயின் எல்லை
பொய்யைப் படைத்தயிப் பூமியிலே - ஏனோ
மெய்யைப் படைத்ததை வேக வைத்தே
தொய்யப் பையில்  காற்றும் போகவிட்டால் - அதில் 
தோன்றும் நிலையென்ன ஆனந்தமோ

செந்தமிழ்த் தேனடை பொற்தமிழோ - எங்கள்
தேவை உயிர் கொள்ளும் வாழ்வுடைமை
தந்தவளே, இனி உன்படைப்பைக் - காக்க
தாமதமின்றியே செய்கடமை
மந்த மாருதமும் வீசிவர - மாலை
மாந்தர் சுகமெண்ணிக்  கூடிவர
அந்தர வான்வெளி கண்டிருக்கு - மெங்கள் 
அன்னையே ஆனந்தமாக்கிவிடு

கன்னங்கருங் காக்கைக் கூட்டமென - இங்கு
காணுமெருதுக ளோட்டமென
பென்னம் பெருஞ்சோலைப் பூமரங்க - ளிவை 
பேசரும் நல்லுணர் வோவியங்கள்
உன்னத ஒற்றுமைக் காணயிவை - சொல்லல்
உன்னரும் வாழ்வினில் காணும்வகை
நன்னெறிகற்று நல்லொற்றுமையில் - மனம்
நாளுமுயர் வெண்ணி வாழ்வையெடு

ஒற்றுமை யற்றவர் வாழ்வினிலே - என்றும்
உண்மைச் சுகந்தன்னைக் காண்பதில்லை
பற்றுமிகக் கொள்ளும் சுற்றமெனில் - அது
பாரில் பிழைத்திடும் முன்னைநிலை
மற்றும் எதுவின்பம் சேர்ப்பதில்லை - ஒரு
மந்திரமில்லை உன் வாழ்வு முறை
கற்றறிவாய் கூடி ஒற்றுமையைக் - கொள்ளக்
காணும் வெற்றி எனும் சக்திநிலை

**********

நானும் அரசன்தான்




நேரே நிமிர்ந்து நடப்பேனடா ஆனால்
நெஞ்சமோ  கூனலடா
பாரே புகழ்ந்திட ஆகுமடா ஆயின்
பாதி மடையனடா
ஊரேமனம் கொண்டு வாழ்த்திடினும்
இவனுள்ளம் சிறுமையடா
வேரே கிடக்குது வாடி யிவனொரு
வீழும் விருட்சமடா
தோல்வி யெனக் கென்றும் சொந்தமடா வெற்றி
தோள்களில் பாரமடா
கால்கள் இறங்கையில் ஓடுதடா மலை
ஏறத் தயங்குதடா
ஆலமரமென நான் வளர்ந்தால் புயல்
ஆட்டும் பின் வீழ்த்துமடா
கோலமதில் நானும் நாணலடா இனி
கொஞ்சமும் வீழேனடா
வேலைகள் செய்திடச் சோம்பலடா நானோ
வீதிக்கு ராசாவடா
மாலைதனில் மது வண்டெனவே மதி
கெட்டொரு மந்தியடா
சாலையில் சுற்றித் திரிவேனடா பல
சேட்டை புரிவேனடா
தோலை உரித்திட யாரும் வந்தால் பின்னே
தோப்புக் கரணமடா
கோவில்கள் வாசலில் பக்தனடா உள்ளே
கொள்கையில் நாத்திகன்டா
சேவைபுரிந்து வணங்கிடுவேன் தரும்
சாதம் வரைக்குமடா
நாவில் நற்கீத மிசைத்திடுவேன் அந்த
நல்லிசை ஞானம்கொண்டோன்
பாவினித்தோ குரல் தந்திடுவான் உதை
போடும் பொதி சுமப்போன்
நாளுமொரு போதும் பொய்யுரையேன் நானோ
நற்குண வேந்தனடா
ஏழுதனை இது எட்டு என்பேன் அது
எண்ணத்தின் மாற்றமடா
பாழுமுலக மெனைக்குறித்து இவன்
பைத்தியம் என்குதடா
ஊரை உலகேய்த்துப் பொய்சொன்னவன் மட்டும்
ஊருக்கு ராஜாவடா!
காதை அறுத்தவன், சங்கிலியைக் கொண்ட
கள்ளன் சிறையிலடா
மாதைக் கெடுத்தவன் மங்கை தீண்டஅந்தக்
மாயவன் உள்ளேயடா
தீதை இழைத் தில்லம் தீயிட் டெரித்தவன்
நீதியின் கையிலடா
ஈது அனைத்தையும் யாரொருவன் செய்தால்
நாட்டின் அரசானடா!

என் அன்னை, என்தேசம், என்கனவு

பகுதி 1
என்னோர் எழில்! நிலவோ ஏறிவான் வீதியிலே
மின்னும் தனதொளியை மேதினியி லூற்றுங்கால்
தன்னந் தனிநடந்து தங்கநில வொளிகுளித்து
முன்னே என்பாதையில் மேற்குவழி நடந்தேன்
வெண்மை நிலவொளியின் வீச்சினில் முன்னிருந்த
கண்முன் னெழில்தோற்றம் கைவரைந்த ஓவியமாய்
எண்ணக் கனவுகளில் எழுகின்ற மாயமெனும்
வண்ணம் கலந்திருக்க வழியில் அவள்கண்டேன்
மண்ணோடு தூசுபட மைவிழிகள் கோபமுற
விண்ணோ டெறித்தநிலா வீசுமொளி மின்னலிலே
பெண்ணின் திடமிழந்து பேசற்கரியவளாய்
திண்மை யிழந்து,வரும் தென்றல் உடல்சரிக்க
நின்றாள் துயர்பெருத்த நீள்விழிகள் நீர்சொரிய
தென்றல் தொடுந்தேகம் தீயெனவே வேகிவிட
கன்னம் எழில்சிதையக் கண்ணீரும் காய்ந்திருக்க
என்னோர் துயரடைந்தாள் ஏதறியேன் என்றதனால்
பெண்ணே பெருந்தகையே பெயரேது நானறியேன்
கண்ணீர் வழிவதுமென் காரணமும் தானறியேன்
மண்ணில்பெருவாழ்வு மாதுகொண்ட தாய்வதன
வண்ணம் தெரியுதம்மா வந்ததிங்கு ஏதென்றேன்
நெஞ்சம் அழுதுகொள நிர்க்கதியாய் ஏந்திழையோ
கொஞ்சம் எனதுகுரல் கொடுத்த மனத்துணிவில்
வஞ்சம் இழைத்தாரே வாழ்விலோர் சிங்கமகன்
நஞ்சின் நெஞ்சத்திரு நாட்டின் கொடியவனாம்
எந்தன் பெயரீழம் இன்பமுடன் தேன்தமிழைச்
சொந்தம் கொண்டே நிலத்தை சுற்றிவர மைந்தரவர்
வந்தோர் பகையறுத்து வாழ்வுதர வீரமுடன்
செந்தேன் தமிழ்வளர்த்து சீருடனே ஆண்டிருந்தேன்
பூவிரியப் புள்ளினங்கள் பொன்வானில் நீந்திவர
தாவிவிழுந் தோடும்நதி தமிழ்வாழ்த்தி இசைபாட
வாவிதனில் நீரோடி வட்டஅலைப் பூமலர
பூமிதனில் ஈழமெனும் பொன்நாட்டுக் கன்னையிவள்
என்னோர் அழகுடனே ஏற்றமுடன் நானிருக்க
வன்மை கொண்டேயுலகு வாழ்வை அழித்ததையோ
இன்னும் உயிர்களைந்து இதுபோதா ஊரழித்து
பொன்போலும் பூமிதனை பேய்வாழச் செய்தார்கள்
கொஞ்சங் குரல்நடுங்க கோதையுடல் தான்துடித்து
பஞ்சாம் முகில்நடுவே பாயுமிடி மின்னல்பட
நஞ்சின் கொடுமைகொண்ட நாகமொன்று தீண்டியதாய்
நெஞ்சம் துடிதுடித்து நினைவழிய மேலுரைத்தாள்

என் அன்னை, என்தேசம், என்கனவு 2

பகுதி 2
அந்தோ படுந்துயரம் அத்தனையும் என்சொல்வேன்
நிந்தை புரிந்தவரோ நெஞ்சழவே கேடுசெய்தார்
இந்தோர் நிலையடைய இன்னலிட்ட எத்தர்தனை
வந்தே விரட்டிவிடு வாய்மை நிலைநாட்டிவிடு      .
எங்கே உலகநீதி எங்கே உரிமையென்று,
செங்கோல் பிடித்தவர்கள் செய்வதென்ன கேட்டுவிடு
பொங்கும் தமிழ்க்குரலை பேச்சை நெரித்தழித்து
சங்கை எடுத்தூதி சாவைஎமக் கீந்ததென்ன
பொன்னால் மணிமுடியும் பெற்றதோர் வாழ்வும்
தன்நேர் நிகரற்ற தமிழ்வாழும் தேசமென
மின்னேர் விளைபுயலின் வேகமெடு மைந்தர்களும்
முன்னே துணையிருக்க முத்தமிழின்மூச்செடுத்து
பன்நூற் கலைவளங்கள்; பண்ணிசைகள் நற்றமிழாம்
முன்னோர் செய்காவியங்கள் மூத்தோர் பழங்கலைகள்
என்னை மகிழ்வுசெய்ய எத்தனையோர் இன்பமுடன்
மன்னர் மணிமுடிகொள் மாவீர ஆட்சிகண்டோம்
அணிகொள் அழகோடு அறத்தின் வழிநடந்தோம்
பிணிகொள் அரசுசில போரென்று நீதிகொன்றார்
பணியா உளஉரமும் பாதையிலே நேர்நடையும்
துணிவோ டுயர்மறமும் துள்ளிவரும் போர்முடித்து
குனியா துணர்வுபொங்க கொள்கைவழி நீதியுடன்
தனியாய்அரசுகண்ட தாயின்நிலை இன்றறிவாய்
இனியேன் மௌனமடா இன்னலிடும் பாதகரை
தனியோர் இனமழிக்க தட்டிப்பதில் கேட்டிடடா
ஈழமகள் கண்களிலே எழுந்தோடும் நீராறு
ஆழமன துன்பமதை ஆற்றாமை தான்விளக்க
வீழுமீர் பூங்கரங்கள் வீரமகள் கால்கள்தனும்
பாழும் பகைபிணைத்து பாடுபெருந் துன்பமிட்டார்
கேழாயென் சின்னவனே கீழாம்நிலை யடைந்தோம்
நாளுமவர் திட்டமிட்டே நாட்டின் குடிகொன்றார்
மாளுமிந்த மக்களுயிர் மகனேநீ காத்திடடா
வாழுமிக் காலமதில் வாசல்வரை தள்ளிவைத்தார்
நாளைஎமை வீதியிலே நாட்டோரம் ஆழ்கடலில்
சூழைதனில் தள்ளியெமை சுற்றிவரத் தீயிடுவார்
மாளமுழு தாயெரித்து மண்ணதனை கொண்டிடுவார்
வாழவென நீஎழுந்து வையகத்தை கேட்டுவிடு
இல்லையெனில் நீயறிவாய் எமதழகுத் தமிழ்த்தேசம்
வல்லோர் அரசுகளின் வாயிலுண வாகிவிடும்
மெல்லத் தமிழழியும் மேதினியில் என்பதனை
பொல்லாப் பெரும்புழுகாய் பூமியிலே ஆக்கிவிடு
துள்ளியெழு உன்னுயிரும் துடிக்கத் துணிவுடனே
தெள்ளுதமிழ் வெல்லுமொரு திக்கைக் கருத்திலெடு
கள்ளினிமை பூமென்மை காற்றின் சுகம்யாவும்
உள்ளதமிழ் வாழஇனி உன்கடமை ஆற்றிவிடு
மங்கும் மதியொளியில் மங்கையவள் சொல்லிவிட
எங்கோ இருந்தெழுந்த  இடியோடு புயலெனவே
பொங்கும் பெருஞ்சுழலோ பூவையவள் முன்னுருள
தங்கஒளி தானுருக்க தலைமறைந்து போயினளாம்
--அன்புடன் கிரிகாசன்

யார் அழைப்பது?


தேவன் கோவில்மணி ஒலிகின்றது- ஒரு
தீபம் அசைவதங்கு தெரிகின்றது
பாவம் கணக்கெழுதி முடிக்கின்றது= ஒரு
பாலம் விழி எதிரில் பிறக்கின்றது
வாவென்றிரு கரங்கள் அழைக்கின்றது- ஒரு
வாசல் திறப்பதங்கு தெரிகின்றது
போவென் றெனைவாழ்வு சினக்கின்றது- நான்
போகும் பாதை விளக் கொளிர்கின்றது
பாசம் விழிகளினை மறைகின்றது- ஒரு
பாரம் மனதில் சுமை கனக்கின்றது
நேசம் இருந்துவிடக் கேட்கின்றது- என்
நெஞ்சம் போராடித் தோற்கின்றது
கூடி இருந்த உடல் துடிக்கின்றது -அதன்
கோலம் எதை நினைத்து சிரிகின்றது
ஏடும் கதை தொடரும் எழுதியதை- புள்ளி
இட்டு முழுதும் என முடிக்கின்றது
ஓடும்நதி கடலில் கலக்கின்றது- அதன்
ஓசைஅடங் கமைதி பிறக்கிறது
வாடும் மனது இனி வசந்தம்மென- தனை
வாட்டும் கடும்துயரைப் பழிக்கின்றது
சேரத் திரிந்தநிழல் பிரிகின்றது- தினம்
செய்யும் மணியொலியும் சிதைகின்றது
தேரும் வழியில் தடம் புரள்கின்றது- சென்ற
திக்கில் தெருமுடிந்து கிடக்கின்றது

கிரிகாசன்

நான் கண்ட ஆனந்தம்!

கோவிலோ கூடமோ மாளிகையோ -இது
 கொற்றவன் நிற்கவே மாடமதோ
மாவிலை கட்டிய தோரணமோ -இம்
 மன்னவன் சாயச் சிம் மாசனமோ
தேரிலே சுற்றிடும் ஆனந்தமோ -அது
  தென்றலே றிவிளை யாடிடுதோ
பூவிலே தொங்கும்பல் மாலைகளோ -இடை
  பூத்ததும் வானத்துத் தாரகையோ
ஏறியே ஓடவே மேகங்களோ -இந்த
   ஏழையை சுற்றியும் தேவர்களோ
கூறியே கொட்டினர் பூமழையோ -இவன்
    கொண்டது வாழ்வில்பெரி தல்லவோ
பேறிலே நல்லதோர் பேறிதுவோ -அவன்
   பிரம்மனும் எண்ணாப் பெருங்கொடையோ
மாறியே கொள்ளும் பகலிரவோ -இம்
   மாற்றம்மென் வாழ்வில் பெருங்கனவோ
அன்பினில் இனிய செந்தமிழே -என்
   ஆவி கலந்திட்ட பொன்மகளே
என்பிலும் ஊடேஓர் தீஎரிதே -இதில்
     இன்ப நினைவும் பெருகிடுதே
பொன்னெனும் வெண்ணிலா பூத்திருக்க -அயல்
    பொய்கையில் நீரலை ஆர்ப்பரிக்க
சின்னஇசை கொண்டு தென்றல்வர -அதில்
    செவ்விதழ் பூமணம் சேர்ந்துவர
மின்னும் மத்தாப்பென வண்ணவெடி எந்தன்
   மேனியில் இன்பமாம் பூச்சொரிய
கண்ணிலே ஆனந்த நீர் பெருக -இது
   கற்பனையென் றுள்ளம் கேலி செய்ய
தன்னிலே சொர்க்கம் தரைநழுவி..வந்து
   தாழுதே காலடி தாங்கிடுமோ
என்னிலேஅன்பு கொள் செந்தமிழே இனி
   இங்கிவன் உன்மடிப் பிள்ளையன்றோ!
மகி

கண்டால் சொல்வீரோ ?


தேடுகிறேன் காணவில்லை தேன்மலரே நீயெங்கும்
வாடும் தமிழனுக்கோர் வழிஒன்று கண்டதுண்டோ
கேடும் துயரங்களும் கெட்டுமனம் சோர உயிர்
ஆடுமொரு ஊஞ்சலென ஆவியலைந் தோடுகிறான்
வெள்ளைநிற மல்லிகையே விதிதானும் இவ்வழியே
அள்ளிப்பெ ரும்புயலாய் அடித்தோடக் கண்டனையோ
நள்ளிரவில் கொல்லுவதும் நாடுபெருந் தீயெரியக்
கொள்ளிவைத்துக் கொல்விதியை கூப்பிட்டு சொல்லிவிடு
கூவி இசைத் தேன்படிக்கும் கோகிலமே இவ்வழியில்
காவியுயிர் தோள்சுமந்து காலன்வரக் கண்டனையோ
ஆவி,உடல் தான்பிரித்தே அள்ளுமுயிர் கொஞ்சமில்லை
சாவு இனிப்போதுமென்று சற்றே நிறுத்தச் சொலு
கார்இருளின் நேர்முகிலே கனத்தோர் மழைபொழிய
நீர்அருவி ஆறெனவே நீபோகும் மண்ணதிலோ
ஊரை அழித்தவனால் உதிரமது பெருகி நதி
ஆறாகி ஓடவைத்தோன் அழிய இடிவீழ்த்தாயோ
வட்டச்சு னைநடுவில் வந்த’அலை’ காலுதைக்க
பட்டதுயர் தான்மறந்து பங்கயமே ஆடுகிறாய்
தொட்டபகை காலுதைக்கத் தூயதமிழ்த் தம்பிசிலர்
விட்டமொழிக் காடுவது விந்தைஉனைக் கற்றதிலோ
ஊரின்எழில் பார்த்துலவும் ஓடுங்கார் வான்முகிலே
நீரைப்பொழிய முன்னே நின்றுபதில் சொல்லிடுவாய்
ஊரை உறவுகளை உத்தமரைக் காக்கவெனப்
போரைநடத் தியவர் போனவழி கண்டதுண்டோ
காற்றின் சுதந்திரமும் காணுமதன் விடுதலையும்
பேற்றில் பெரும்பேறாய் பேசிடுவர் எனையெண்ணி
நேற்றோ பூந்தென்றலென நின்றவர்கள் நீதிக்காய்
சீற்றப்புய லாகிப்பின் சென்றதிசை கண்டவர் யார்?
பூவே, விரிவானே, போகும்முகில், புள்ளினமே
நாவே நறுந்தமிழை நல்லிசைப்போர் கொன்றுஒரு
சாவே பிடியென்று சுற்றும்புவி தந்திடினும்
போ,வீறு கொண்டிவரோ புத்தீழம் செய்திடுவர்!

காதல் கொள்ளுவளோ? கொல்லுவளோ?

தெண்ணிலவு வானுலவத் தேகங்குளிர் கொள்ளும்
கண்மயங்கிக் காதல்கொளக் கன்னியரைத்தேடும்
பண்ணிசையோ காற்றெழுந்து பாடுமொலி கேட்கும்
அண்ணளவாய் இன்பந்தரும் அந்திவேளை தன்னில்
மஞ்சள் வெயில் மாலைசுகம் மயங்கு மந்தவேளை
மஞ்சமதில் சாய்ந்தவனோ மதிமயங்க நின்றேன்
கொஞ்சுமிளங் குருவிகளின் குறுகுறுத்தஓசை
கூடிஅவை மகிழுகின்ற குரல்வெளியே கேட்டேன்
சின்னதொரு கிண்ணமதில் திராட்சை ரசம் உண்டேன்
செவ்விழிகள் நீர்வழிய சிற்றிடையாள் அவளோ
கண்கலங்கி நிற்பதனைக் கண்டணைக்கச் சென்றேன்
கரமெடுத்து சென்றவனோ கணம் வியந்து நின்றேன்
வண்ண மலர்க் கண்ணழகுப் பெண்ணவளோ முன்னால்
வாசமெழக் குளிரெடுத்த பூவெனவே நின்றாள்
எண்ணமதிற் சித்திரமோ இல்லை சிலைதானோ
எழில்வடிவம் தீட்டியதோர் இயற்கை மகள்தானோ
பொன்னுதட்டிற் பூஅலர்ந்து பொங்குமெழில் வண்ணம்
புதுமெழுகில் வார்த்தமுகம் பஞ்செனவே கன்னம்
தென்னையிலை தென்றலுக்கு தலைஅசைத்து மின்னும்
தன்மையிலே இடையசையத் தாகமுடன் பார்த்தாள்
வஞ்சிமனம் வைத்த துள்ளே என்னவென்று அறியேன்
வாசனைக்கு பூமறந்து வந்த வண்டைக் கண்டேன்
நெஞ்சிலெழும் இச்சைதனை நீலவிழிப் பார்வை
நெளிபுருவ வில் வளைத்து நினைவழிய எய்தாள்
தேரிலேறி திங்களுலா தோன்றும் எழில்வண்ண
திருமகளின் ஒரு உறவு திரும்பியெனைக் காண
போரிலேதும் இல்லையெனப் பிழைத்தவனைப்போல
பேச்சிழந்து மூச்சிரைத்து பேசும்குரல் கேட்டேன்
சின்னவளே இப்படிநீ சீறும்விழி கொண்டு
செந்தணலாய் நிற்பதுஏன் சென்றுவிடு உந்தன்
புன்னகையிலற் கொல்லுகிறாய் போதுமடி பெண்ணே
பூவுடலில் காணுமெழில் பித்தமிடக் கண்டேன்
கன்னியவள் நேர்திரும்பி கண்களெனைப் பார்த்து
கனியுதடைக் கடித்து ஒரு கள்ளநகை பூத்து
என்னிதயங் கொண்டவரே இன்றுமது வாழ்வு
எல்லைவந்து சேர்ந்ததடா கொல்லுகிறேன் என்றாள்
அஞ்சி மனம் பதைபதைக்க அவளெழுந்துமுன்னே
ஆடுமொரு பாம்பெனவே  அகமெடுத்த நஞ்சும்
வஞ்சியொரு கையில் சிறு வாளெனவே கத்தி
வைத்தபடி காலெடுத்து வந்துவிடக் கண்டேன்
அத்தனையும் சொத்து பணம் ஆசைகொண்டு வந்தேன்
ஆடுவரை ஆடியுனை அன்பு கொள்ளவைத்தேன்
இத்தரையில் எண்ணியதை இறுதியிலே வெல்வேன்
இறைவனைநீ தொழுது நில்லு இறுதி மூச்சுஎன்றாள்
புன்னகைத்த பொன்னிலவோ பேரிடியாய் நிற்க
பூவிழிகள் மின்னியொரு புயலெனவே கண்டேன்
இந்தவேளை பார்த்தவரோ இனித் ’தொடரும்’ போட்டார்
எழுந்து தொலைக்காட்சி தனை எரிச்சலோடு அணைத்தேன்

முத்துத்தமிழ் இனம்


முத்துத்தமிழ் சத்தம் இடுமினம்
வெட்டித்தலை கொத்திக் கிழியென
சட்டம்ஒரு சுற்றும் புவியிடை உளதாமோ
சொத்துக்களைத் தட்டிப் பறியிவர்
கற்பைக்கெடு, குத்திக் கொலையென
புத்தம்மதம் கற்கும் விதிமுறை உளதாமோ
கொத்துக்குலை மொத்தத் தமிழரும்
கத்திக்குரல் சத்தமிட ஒழி
மக்கட்தலை சுட்டுக் கருகென வெடிபோடு
சுற்றும்பெரு யந்திரப் பறவையும்
சுற்றிப்பொது பொத்து பொதுவென
கொட்டும்இடி குண்டுப் பெருமழை பொழிந்தாக
முற்றும்அழி மக்கள் முழுவதும்
திக்குத்திசை விட்டுத் திரிபடும்
சிக்கல்பட நச் ஒற்றைத் தமிழனும்
சற்றும் விதிபெற்றுக் குறைஉயிர்
உற்றுக்கொள வெட்டிக் குழியிடு எனவாக
கத்திக்குடிசுக் கலவையை எறிந்தானே
வெட்டித்தலை கொட்டக் குருதியும்
பட்டுத்தெறி ரத்தக் கறையதும்
சுட்டுக்கொலை யுற்றுக் கலிபட புவிதானோ
பட்டுக்கிட செத்துத் தொலையென
சொட்டும்மனம் இரக்கப் படவிலை
சட்டம்ஒரு முற்றும் குருடென விழிமூட
பத்தும்பல கட்டுக் கதைகளை
விட்டுப்பலர் புத்தித் திரிபட
சுத்தம்மனம் புத்தன் மகனென உலகெண்ண
செத்தும்விழும் ரத்தப் பிணமதை
கொத்திகுடல் தின்னுங் கழுகதின்
வர்க்கம் இவன் வெட்டக் குலையென வீழ்ந்தோமே
பக்கம்இரு ரத்தக் கொலைவெறி
யுத்தப்பிரி யெத்தன் அரசது
கத்தையெனக் கட்டுப் பணமது கரமீய
மத்தம்பிடி பித்தன் கொலையிடு
வித்தைதனை மெத்தப் பழகிய
குத்துக்கொலை மன்னன் தலையிடு முடிவீழ
விட்டுத்துயில் தட்டுக் கதவினை
சட்டத்துறை தக்கப் பதிலிடும்
குற்றந்தனை சொல்லிக் கொடு,பதில் நீகேளாய்
வெட்டிக்குடல் ரத்தக் குடியனை
சட்டத்தவர் இட்டுச் சிறையிடை
குற்றந்தனை ஒத்துக் கொளும்வரை விலகாதே
கட்டித்தடி வெள்ளை கொடியுடன்
விட்டுச்சுடும் வீரக் குழலதும்
வைத்துத்தனி வெற்றுக் கரமுடன் இவர்போக
கட்டிக்கயி றிட்டு கொடுமைகள்
சுட்டுத்துடி கொள்ளக் கடும்வதை
இட்டுக்கொலை செய்யும் கயவரை விடலாமோ
வெட்டித்தமிழ் மக்கள் கொலையிட
கத்திக்கிலி பற்றிக் கதறிய
மொத்தக்குரல் விட்டு போவென விடுமாமோ
வட்டிச்சக மொத்தத் தொகைபெற
கத்திக்குரல் விட்டுக் கதறிட
பட்டுத்துயர் முட்டச் சிறையிடை தள்ளாயோ
ஒற்றைக்கரம் கொண்டே உருவிய
வெட்டுக்கொலை வாளைச் செருகிட
பக்கம்அணைந் தன்பை முதலினில் பரிவாக
பெற்றுப்பல வெற்றுக் கதைகளை
விட்டுப்புறம் வெட்டத் துணிவுற
வட்டக்கதிர் முற்றும் மேற்கிடை மறைவானே
அச்சம்இலை சற்றுப் பொறுபொறு
சுற்றும்ஒளி மற்றத் திசைதனில்
எட்டிக்கதிர் விட்டே விடியலில் எழுந்தேகும்
திட்டமிடு துட்டர் தனையது
சட்டம்எமை முற்றும் புரிந்திட
எட்டுத்திசை மெச்ச பிறந்திடும் தமிழீழம்