Saturday 7 May 2016

அந்தநாள்

வல்ல ஈழதேசம் அன்று வான்கதிர்க்கு நேர்நிகர்த்த
வாய்மைகொண்டு மக்கள் மண்ணைக் காக்க
சொல்லவே இனிக்கும் பேச்சு தூயநற் தமிழ்பொலிந்த
சோதியாக மின்னும் அன்பு கொண்டு
தொல்லையற்று நம்மைநாமே தோள் வலித்தவீரர்சூழ
தூக்கியகை வாளும்கொண்டு காக்க
எல்லையிட்டு நெல்வயல்கள் ஈரமுற்ற ஆழிசார்ந்த
மண்ணும் முல்லையோடு வாழ்வு கண்டோம்

நெல்வளைந்து மங்கை போலும் நீரில்தன் முகம்கணித்து
நீலவானின் செங்கதிர்க்கு நாணும்
வல்லகூச்சலிட்டும் ஓடி வானெழுந்து வட்டமிட்டு
வான்குருவி நெல்துணித்துக் காவும்
கல்லில் தெய்வரூபம் கண்டு கந்தன்வேலை முன்னிறுத்திக்
காணும் தெய்வக் கோவிலொன்று பக்கம்
இல்லை துன்பமென்று வாழ்ந்த எங்கள்தேச  மக்களன்றோ
இன்பங் கொண்டதோ மருதமாகும்

மென்னலைக்கு ஏற்ப ஆடும் மீன்பிடிக்கும் ஓடமேறி
மீண்டவர் கரையிலிட்டபோது
தன்வலைக்கு வீழ்ந்த மீன்கள் தான்துடிக்க கண்டுமாலை
தூயவள்அஞ் சும்விழிகள் நோக்கி
என்னதோ இரண்டுமீன்கள் என்னை தம்வலைக்குள்வீழ்த்தும்
ஈதொருநல் லற்புதம் என்றேங்க
வன்பகை முடிக்க வீரம் வாய்ந்த கப்பலோடும் மக்கள்
வாழ்க்கை நெய்தல் என்றதன்மை காணும்


சில்லென்றூதும் வண்டும்தேடும் செவ்விதழ்ப் பூ கானகத்தில்
சோவென்றோடி விழருவிகொட்டும்
கல்லின்மீது பட்ட நீர் தெறித்து சாரலாய் முகத்தில்
காதல் கொண்டு முத்தமிட்டே ஓடும்
எல்லைகாத்த வீரர் தூரம் இட்டசத்தம் வெற்றி கூறும்
ஏற்றதோர்  முழவின் ஓசை கேட்கும்
நல்லினித்த வாழ்வுகாணும் நாட்டுமக்கள் அச்சமின்றி
நாளுமன்று வாழ்ந்த காலம் யாவும்’

இன்றழிக்கத் தீயையிட்டு அள்ளிசாம்பல் மேட்டில் வீடு
அந்நியன் தன்சொந்தமென்று கட்டி
இன்பமென்று வாழ்ந்த வீடு எங்கள்மண்ணும் விட்டேயோடி
உண்ட நெல் விதைத்த காணி தோட்டம்.
இன்னமும் வலைபிடித்து ஏற்றவாழ்வி யைந்த மக்கள்
இல்லத்தோடு சொத்தும் சூறையாடி
கன்னமிட்ட வர்கரங்கள் காணும் ரத்தப்பூச்சு மாற்றக்
கைவிலங்கு போடும்நாளுமென்றோ

----------............

No comments:

Post a Comment